இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் நவம்பர் 12-ஆம் தேதி அன்று சுரங்கத்தில் சிக்கி கொண்டனர். அவர்கள் பல நாட்களுக்கு பிறகு நேற்று(28.11.23) பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சுரங்கப் பாதைக்கு வெளியில் காத்திருந்த மக்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கினர்.
சுரங்கப்பாதைக்கு வெளியில் காத்திருந்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் தொழிலாளர்களை வரவேற்று நலம் விசாரித்தனர்.
இந்திய பிரதமர் மோடி தொழிலாளர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தொழிலாளர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழாய் வழியாக சக்கரம் பொருந்திய ஸ்ட்ரெச்சர்களை அனுப்பி அதன் மூலம் ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பல சிக்கல்களுக்கு இடையில் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்பு குழுவினருக்கும், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தியா முழுவதும் கட்டப்பட்டு வரும் 29 சுரங்கப் பாதைகளை ஆய்வு செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.