Latest Sports News Online

“தாய் தான் எல்லாத்துக்கும் மேல் என்று” சும்மாவா சொன்னாங்க…அமேசான் காட்டில் தன் உயிர் இருக்கும் வரை குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டிய தாய்!

அமேசான் காட்டில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டனர் என்று நம்பப்பட்ட குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின்பு மீட்கப்பட்டனர் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி தான். ஆனால் அந்த குழந்தைகள் காட்டில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளனர்.

அதிலும் அவர்களின் தாயைப் பற்றி கூறிய சம்பவம் அனைவரின் மனதையும் கரைய வைத்துள்ளது. குழந்தைகள் காட்டில் உயிர் வாழ “பழங்குடி குடும்பங்களில் இருந்து அவர்கள் கற்றுக்கொண்ட பழக்கவழக்கங்களே காரணம்” என்று கொலம்பியா அதிபர் தெரிவித்தார்.

அமேசான் காட்டின் மீது பறந்த விமானம் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி எதிர்பாராத விதத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தின் பைலட், நான்கு குழந்தைகளின் தாய் மற்றும் நபர் விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் குழந்தைகள் உயிரோடு இருக்கின்றனர் என்று தகவல் தெரிந்ததுமே அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில் காட்டில் உள்ள சாப்பிடக்கூடிய செடிகள் மற்றும் விதைகளை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை சாப்பிட்டே குழந்தைகள் 40 நாள் உயிர் வாழ்ந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. சிறு வயது முதலே பழங்குடி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை சொல்லி வளர்த்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் பகிர்ந்து கொண்ட பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளன. குழந்தைகள் தேடுதல் குழுவினரை கண்டவுடன் ஓடி வந்து “எங்களுடைய அம்மா இறந்துவிட்டார்…எங்களுக்கு பசிக்கின்றது” என்று அழுது கொண்டே கூறியுள்ளனர்.

அந்த நான்கு குழந்தைகளின் வயது முறையே 13, 9, 5 மற்றும் 3 ஆகும். நான்கு குழந்தைகளில் மூத்த குழந்தை பெண் குழந்தை லெஸ்லி ஆவார். அவர் தனது 3 உடன்பிறப்புகளையும் நாற்பது நாட்களாக காத்து வந்துள்ளார். காட்டிலேயே படுக்கை போன்று உருவாக்கி அதிலே படுத்து உறங்கி இருக்கின்றனர்.

அதில் மூன்று வயது கடைக்குட்டி சிறுவன் மட்டும் அம்மாவை நினைத்து அழுது கொண்டே இருந்த நிலையில் அதிகாரிகள் அவனுக்கு நம்பிக்கை ஊற்றி தேற்றினர். சிறுவர்களின் அம்மா இறக்கும் பொழுது அவர்கள் அனைவரும் அம்மாவுடன் இருந்தனர் என்பதே அதிர்ச்சியூட்டும் உண்மை.

அவர்கள் அம்மா இறக்கும் தருவாயில் குழந்தைகளை அழைத்து, “நீங்கள் உடனே இங்கிருந்து புறப்படுங்கள். கிடைத்தவற்றை சாப்பிட்டு உயிர் வாழுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் நிச்சயமாக காப்பாற்றப்படுவீர்கள். உங்களது தந்தை உங்களுக்காக இருப்பார். நான் உங்களை காத்தது போலவே உங்களது தந்தையும் உங்களை பாதுகாத்துக் கொள்வார். கவலைப்படாமல் இருங்கள்” என்று நம்பிக்கையூட்டிவிட்டு இறந்து இருக்கின்றாள் அந்த தைரியத்தாய்.

குழந்தைகள் கூறிய இந்த தகவல்களை கேட்டதும் அங்கிருந்து அவர்கள் மனம் நெகிழ்ந்தனர். இந்த சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு காட்டின் மேல் இருந்த அறிவு வியப்படையச் செய்தது. இந்த குழந்தைகள் இயற்கையை நேசிக்க வேண்டும் என்று கூற்றுக்கு எடுத்துக்காட்டு.